தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுவாமி என்பவர் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர். இவருக்கு செங்கோட்டையில் வசிக்கும் காளிதாஸ் என்ற நபர் பழக்கமானார். அந்த நட்பு காலப்போக்கில் நம்பிக்கையாய் மாற, ராமச்சந்திரன் தனது சொத்து வாங்கும் பணிகளில் காளிதாசை முழுமையாக நம்பி செயல்பட்டார். 2012 மற்றும் 2013ல் காளிதாஸ் வழியாக சில நிலங்களை வாங்கியதுடன், அவரது வீட்டுக்குப் பக்கத்து 7 சென்ட் நிலத்திற்காக ₹10 லட்சம் பணமும் வழங்கினார். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரம் தரப்படவில்லை.

மேலும் 2010ல் பண்பொழி பகுதியில் ரூ.33 லட்சத்திற்கு வாங்கிய 6.18 ஏக்கர் நிலத்தை ராமச்சந்திரன் விற்க முயன்றபோது, காளிதாஸ் அது ரூ.2 கோடிக்கு மேல் விற்றுத் தருவதாக கூறினார். இதை நம்பிய ராமச்சந்திரன், காளிதாசுக்கு பொது அதிகார பத்திரமும், வங்கி கணக்கை இயக்கும் அதிகாரமும் வழங்கினார். ஆனால் நில விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை என காளிதாஸ் தொடர்ந்து கூறி வந்தார்.
2023ம் ஆண்டு நேரில் இந்தியா வந்த ராமச்சந்திரன், அந்த நிலத்தில் வேறு நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள், அந்த நிலத்தை ரூ.1.11 கோடிக்கு வாங்கியதாக கூறியபோது, உடனே வில்லங்க சான்றிதழை எடுத்துப் பார்த்தார். அதில், தனது பொதுப்பத்திரத்தை பயன்படுத்தி காளிதாஸ் அந்த நிலத்தை ஏற்கனவே விற்றுவிட்டதும், விலைப் பணத்தை தனக்கு தெரியாமல் கைப்பற்றியதும் தெரியவந்தது.
இதைப் பற்றி நேரில் கேட்ட போது, காளிதாஸ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் மனவேதனையில் சிக்கிய ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்திடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து, காளிதாஸை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். தற்போது காளிதாஸ் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் உள்ளார்.