சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இல்லை; அவை புதிய கோரிக்கைகள் அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஊதிய முரண்பாடுகளைத் தீர்க்கக் கோரி 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவித்த நிலையில், அந்த கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு கடந்த மாதம் 24-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதமாகியும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் தொடர் துரோகங்களையும், வஞ்சகங்களையும் கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது, மக்கள் நல அரசின் கடமை. அதற்குப் பதிலாக அரசு ஊழியர்களை மிரட்டி பணிந்து விடலாம் என்று தமிழக அரசு நினைத்தால், அரசுக்குப் பரிசாகத் தோல்விதான் கிடைக்கும்.
அரசு ஊழியர்கள் தமிழக மக்களின் தவிர்க்க முடியாத அங்கம். உள்ளிட்ட தமிழக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சட்டமன்றத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றுவது போல், அரசு ஊழியர்களையும் ஏமாற்ற முயல்கிறது.
தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதில் அரசு ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது. தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தால் கொதிப்படைந்துள்ள அரசு ஊழியர்கள், வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்குவோம் என சபதம் எடுத்துள்ளனர். மக்களும் இதே மனநிலையில் இருப்பதால், வரும் தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டப்படும்,” என்றார்.