சென்னை: சேலம் பெரியார் பல்கலையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு பணி நியமனம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கல்வித் துறைத் தலைவர் பதவிக்கு, தகுதியும், முதுநிலை பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து, துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும், அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் துறைத் தலைவர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை பொறுப்புத் தலைவராக இருந்த டாக்டர் பெரியசாமி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்தத் துறையின் மூத்த பேராசிரியை தனலட்சுமிக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த தகுதியும், சீனியாரிட்டியும் இல்லாத வெங்கடேஸ்வரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் தகுதியற்றவர். கடந்த ஆண்டுதான் அவர் கல்வித்துறையில் சேர்க்கப்பட்டார்.
எடப்பாடி பெரியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். உறுப்புக் கல்லூரிகளை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் வெங்கடேஸ்வரன் தற்காலிகமாக கல்வித்துறையில் சேர்க்கப்பட்டார்.
விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராக மட்டுமே கருதப்பட வேண்டும். ஆனால் அந்த தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி வெங்கடேஸ்வரன், எடப்பாடி கல்லூரி முதல்வராக நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் பேராசிரியர் பதவியில் இருப்பவரைப் புறக்கணித்து, இணைப் பேராசிரியர் பதவியில் இருப்பவரைத் துறைத் தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?
பேராசிரியை தனலட்சுமி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், துறைத் தலைவர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தகுதியும் அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன், துணைவேந்தருக்கு நெருக்கமானவர் என்பதால், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி. அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளை முதல் ஓய்வு பெற உள்ள நிலையில், இப்படி உத்தரவு பிறப்பிக்க தார்மீக உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு வழங்காமல் போலி ஆவணம் தயாரித்து பணம் மோசடி செய்ததாகவும், இத்திட்டத்தின் கீழ் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலையில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்,” என்றார்.