ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர்-07 அன்று கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, திருப்புல்லாணி, பரமக்குடி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம் மற்றும் பல இடங்களில் செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஊர்வலங்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில். விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தில் திட்டக்குடி சந்திப்பு, பெரியகடை சாலை, ராமகிருஷ்ணாபுரம், சேரன் கோட்டை, எம்ஆர்டி நகர், இந்திரா நகர், சிவகாமி நகர் உள்ளிட்ட 30 இடங்களில் பா.ஜ., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
முன்னதாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் நிறுவ போலீஸார் கட்டுப்பாடு விதித்திருந்தனர். அதன்படி, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாமல் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். மேடையில் விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. மதவெறியைத் தூண்டும் அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலான முழக்கங்களை எழுப்புவதை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் நடக்கும் இடங்கள், கரைக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மினி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டிகளிலோ, 3 சக்கர வாகனங்களிலோ கொண்டு செல்லக் கூடாது.
ஒலிபெருக்கி பொருத்துவதற்கு காவல் கண்காணிப்பாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை மின் வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் சிலைகள் வைக்க உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.