புதிய அரசியல் பதிப்பகம் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ புத்தகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ், விஐடி அதிபர் ஜி.விஸ்வநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம், PMK கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி, அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புத்தகத்தின் முதல் பிரதியை விஐடி அதிபர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் பெற்றுக்கொண்டார். விழாவில் ராமதாஸ் பேசியதாவது:- அரசியல்வாதிகள் நிறைய படித்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அவர்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதிகாரிகளை தங்களோடு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதிகாரிகள் சொல்வதை எல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடாது.
மக்கள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். ஆனால், சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் என்னை அடைத்து வைத்துள்ளனர். நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் இவைதான் நமக்குத் தேவை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு வருவது போல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும். நான் எப்போதும் மக்களுக்காக போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகையில், “பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 20 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரை போல் மது ஒழிப்புக்காக போராடியவர்கள் இந்தியாவில் இல்லை. நதிநீர் பிரச்னைக்கு தீர்வு உண்டு. 6 மாதம் ஆட்சியில் இருந்தாலும், நாங்கள் தமிழகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக ராமதாஸை ஜாதி தலைவர் என்று சொல்லி சிறுமைப்படுத்துகிறார்கள்.
ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் போராடியவர் ராமதாஸ். அப்படிப்பட்டவனை வேலையில்லாதவன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இங்குள்ளவர்கள் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள், ஆனால் சமூக நீதியை நிலைநாட்டவில்லை. விஐடி அதிபர் ஜி.விஸ்வநாதன் பேசுகையில், “பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஏழை, எளிய நடுத்தர வகுப்பினர் உயர்கல்வி பெறுவதில் சிரமம் உள்ளது. வீணாக கடலில் கலக்காத வகையில் நதிகளை இணைக்க வேண்டும். வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்கள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.