ராமேஸ்வரம்: கொல்கத்தா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் இருந்து சிறிய கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் பாலங்களை கடந்து மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் அரபிக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு செல்கின்றன. இதேபோல், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தெற்கு துறைமுகங்கள், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு துறைமுகங்களில் இருந்து வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு சிறிய கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரெயில் மற்றும் சாலை பாலங்கள் வழியாக செல்கின்றன.
பாம்பன் புதிய ரயில் பாலம் பணிக்காக பாம்பன் பாலங்கள் வழியாக சிறிய கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் கப்பல்கள் செல்ல கடந்த மே மாதம் அனுமதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு மூன்று சிறிய சரக்கு கப்பல்கள் ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்தன. பாம்பன் ரயில்வே மேம்பாலங்களை திறக்க அனுமதி கிடைக்காததால், இந்த கப்பல்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று கப்பல்களிலும் 30 மாலுமிகள் உள்ளனர். ராமேஸ்வரம் கடற்பரப்பில் அனுமதியின்றி கப்பல்கள் நிறுத்தப்பட்டதால், கடற்படை மற்றும் மரைன் போலீசார் 3 கப்பல்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகளிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கப்பல்களை அப்பகுதியில் நிறுத்தக் கூடாது என்றும், ஆழமான கடல் பகுதிக்கு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
தனுஷ்கோடி மணல் திட்டுகளில் நீரோட்டம் மற்றும் மணல் திட்டுகளால் சிறிய கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மணல் திட்டுகளில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியைச் சுற்றி வருவதற்கும் அதிக எரிபொருள் செலவாகிறது. தற்போது புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், பழைய மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலங்களை படகுகள் மற்றும் கப்பல்கள் செல்ல திறந்து விட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.