சென்னை: குடிமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் தங்கள் பயணத்தை நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம். பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியானது.
அதே நேரத்தில், இதுபோன்ற முன்பதிவு செய்யும் பலர், தங்கள் பயணத் தேதிக்கு முன்பே சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள். இதனால் ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ததில் சில முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.