சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் ஜூன் 9 வரை தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். இந்த ஆண்டு, பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குச் சேருவதற்கான ஆன்லைன் பதிவு மே 7-ம் தேதி தொடங்கியது.
முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2500 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றினர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மொத்த விண்ணப்பப் பதிவு 6 ஆம் நாளில் ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், 14-ம் நாளில் அது 2 லட்சத்தைத் தாண்டியது.

இந்த சூழ்நிலையில், நேற்று, 30-ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர், அவர்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 5 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் முடிவடைகிறது.
கடைசி தேதிக்குள் விண்ணப்பித்த மாணவர்கள் 9-ம் தேதி வரை தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தொடர்ந்து, ஜூன் 11-ம் தேதி மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் ஒதுக்கப்படும். அவர்களின் சான்றிதழ்கள் ஜூன் 20-ம் தேதி வரை ஆன்லைனில் சரிபார்க்கப்படும். இந்தப் பணி முடிந்ததும், ஜூன் 27-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் கவுன்சிலிங் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.