புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக டெல்லியின் மத்திய பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாட்டின் 76-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஆடை ஒத்திகை நேற்று விஜய் சவுக்கில் இருந்து செங்கோட்டை வரையிலான பணிப்பாதையில் நடைபெற்றது.
இதனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா கேட் மற்றும் ஐடிஓ (வருமான வரி அலுவலகம்) ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ரிங்ரோடு, விகாஸ் மார்க், சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நொய்டாவைச் சேர்ந்த சினேகா ராய் கூறுகையில், டெல்லி-நொய்டா எல்லையில் பாதுகாப்பு சோதனை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.