குன்னூர்: நீலகிரி மாவட்டம் மலைப்பாங்கான மாவட்டம் என்பதால், பருவமழை காலத்தில் மற்ற மாவட்டங்களை விட நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யக்கூடும். இதுபோன்ற நேரங்களில் அனைத்து துறைகளும் இணைந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, வரும் தென்மேற்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களை குன்னூர் ரயில்வே துறை கண்டறிந்து, அபாயகரமான பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம், மழைநீர் செல்லும் வகையில், தண்டவாளத்தின் இருபுறமும் கால்வாய் அமைத்து வருகிறது. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மழைநீர் வடிய போதிய இடமில்லாததால், மழைநீரால் மண் நனைந்து, தண்டவாளத்தில் பாறைகள், மரங்கள் விழுந்து, ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மழைநீர் வெளியேற வழி ஏற்படுத்தினால், விபத்துகளை தவிர்க்கலாம்,” என்றனர்.