
திருவண்ணாமலை: பென்ஜால் சூறாவளி காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதனால் தீபமலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு வ.உ.சி.நகர் 9-வது தெரு மலைப்பகுதியில் உள்ள வீடுகள் புதைந்தன.
இந்த சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரது வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது. மேலும், 2 வீடுகளும் நிலச்சரிவில் சிக்கின. உடனே அங்கிருந்து சென்றதால் அந்த 2 வீடுகளிலும் வசித்தவர்கள் மண்ணில் புதையாமல் தப்பினர். ஆனால் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்ட ராஜ்குமார் வீட்டில் இருந்தவர்களின் கதி என்ன? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அப்போது வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது 2 குழந்தைகள், அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். இந்நிலையில் 2-வது நாளாக என்.டி.ஆர்.எஃப் உடன் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வ.உ.சி.நகரில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.