திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வுப்பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலங்களில் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். அவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஜா்கான் தைக்காவில் அறங்காவலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிலப்பிரச்சினைகள் சில காலமாக நிலவி வந்ததாக தகவல்கள் உள்ளன, மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலையில் ஜாகிர் உசேன் பிஜிலி தொழுகை முடித்து செல்லும் போது, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் இன்று காலையில் தொழுகை முடித்து செல்லும் போது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.
அண்ணாமலை மேலும் கூறியதாவது, “பணி ஓய்வுக்கு பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜாகிர் உசேன், வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தார். அதன் பின்னரே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறியிருந்தார்.”
அந்த காணொளி தற்போது வெளியாகியிருப்பதாகவும், “ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் வந்து, அவரை மர்மநபர்கள் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது” என்று அண்ணாமலை கவலைப்பட்டார்.
அத்தோடு, “சாதாரண மக்களின் புகார்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்கும்,” என்று அவர் கூறினார். “இந்த கையாலாகாத திமுக அரசால் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப் போகின்றன?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.