சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் தனக்கு மிகுந்த உந்துதலை அளித்ததாகக் குறிப்பிட்டார்.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் தான் தென்மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிய அடித்தளம் அமைத்தது என பாராட்டிய ரேவந்த் ரெட்டி, அந்த மாதிரியாகவே தமிழ்நாடு அரசு இன்று செயல்படுத்தும் பல நலத்திட்டங்களையும் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
“தமிழ்நாடு அரசின் திட்டங்களை அடுத்த கல்வியாண்டு முதல் தெலுங்கானாவில் அமல்படுத்தப் போகிறோம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான இத்தகைய முயற்சிகள் எங்கள் மாநிலத்திலும் பயனளிக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்” என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை கேட்ட மாணவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்றோரும் பெருமிதத்துடன் வரவேற்றனர். தமிழக அரசின் கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் பரவலாகக் கவனம் பெறும் நிலையில், ரேவந்த் ரெட்டியின் இந்த முடிவு கல்வித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.