தஞ்சாவூர்: தஞ்சை மாரியம்மன் கோயில் ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்தான். வறுமையான நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கூலி வேலை மற்றும் 100 நாள் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர வேறு எந்த வகையிலும் எங்களுக்கு வருமானம் இல்லை.
இந்நிலையில் மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டால் 100 நாள் வேலை செய்யும் நாங்கள் வேலை இழந்தும் அதிகமான வரி செலுத்தும் நிலை உருவாகும். ஏற்கனவே வறுமை நிலையில் உள்ள எங்களால் இந்த வரியை கட்ட முடியாத நிலை ஏற்படும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தின் நலன் கருதி மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.