தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்த புகாரில், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது:- என் மகள் இறந்ததில் போலீசார் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து எஸ்பி அலுவலகத்திடம் கேட்டபோது, மகளின் ஆடியோ பதிவு, உடல் பரிசோதனை மற்றும் செல்போன் பரிசோதனை ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அறிக்கை வரும் வரை நானும் காத்திருந்தேன். 10-ம் தேதி மனு தாக்கல் செய்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வழக்கு இழுபறியாகிறதா என்று யோசித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். டிஜிபியும் எஸ்பியிடம் நேரடியாகப் பேசினார்.

உலகில் உள்ள அனைவரும் என் மகள் இறக்கும் தருவாயில் சொன்னதைக் கேட்டிருப்பார்கள். அதில் என் மகள் அனுபவித்த சில விஷயங்களைப் பொதுவில் சொல்ல முடியாது. அதனால்தான் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தைச் சேர்க்க புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். நீதித்துறையும் தமிழக அரசும் நிச்சயமாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து என் மகளுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.
பெண்ணை இழந்த பிறகு வழக்கு மிகவும் மெதுவாகச் செல்வதாக நான் பயப்படுகிறேன். குற்றவாளிகளின் உறவினர் திருப்பூரில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர். அதனால்தான் எனக்கு சந்தேகம் வந்தது. வழக்கிலும் சரியான பிரிவு பதிவு செய்யப்படவில்லை.
அவர்கள் பெறும் தண்டனை உலகில் வேறு யாருக்கும் வழங்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அவர் இவ்வாறு கூறினார். அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.