ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவாக 1995-ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் ஊட்டி ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பூங்காவை திறந்து வைத்தார். முதற்கட்டமாக, பல்வேறு வகையான 1,500 ரோஜா செடிகள் நடப்பட்டன. பின்னர், தாவரங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது.

2006-ம் ஆண்டில், ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆஃப் தி எக்ஸலன்ஸ்’ விருதுக்கு இந்த பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில் பூங்கா மேலும் 2 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு 200 புதிய ரக ரோஜாக்கள் நடப்பட்டன. இந்த பூங்காவில் தற்போது 4,000 வகையான ரோஜா செடிகள் 30,000 நடப்பட்டுள்ளன.
கோடை சீசனை முன்னிட்டு, பூங்காவில் உள்ள செடிகளை சீரமைத்து உரமிட்டனர். தற்போது பூங்காவில் பல வண்ண ரோஜாக்கள் பூத்துள்ளன. கோடை மழை இல்லாததால் செடிகளுக்கு கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.