கோவை: மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்ட சத்குரு அதை நிறைவு செய்து கோவைக்கு திரும்பினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்குரு புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், “மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது” எனக் கூறினார்.
சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, முதன்முறையாக 17 நாட்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் அவர் கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.
நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய சத்குரு, “கடந்த ஆண்டு தலையில் அடிப்பட்டதால், இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 2 வருடம் மோட்டார் சைக்கிள் பயணம் கூடாது என்றார்கள். 5 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு கைலாய யாத்திரை செல்வதற்கான பாதை திறக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை போக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஏனென்றால் யோக விஞ்ஞானத்தின் சக்தியை என்ன என்பதை காட்டவே இந்த யாத்திரையை மேற்கொண்டேன். யோகா என்றால் உடலை வளைப்பது, மூச்சை பிடித்துக்கொள்வது அல்ல, உயிர் மூலத்துடன் தொடர்பு கொள்வது. அந்த சக்தியை கையில் எடுத்துக்கொள்வது.
மருத்துவ ரீதியாக இது முடியவே முடியாது என்று சொல்கிறார்கள், இதை அதிசயம் என்று சொல்லவில்லை, உயிரே அதிசயமானது தான். அந்த உயிருக்கு மூலமானது அதை விட பெரிய அதிசயம். யோகா என்பது அதனுடன் இணைந்து வாழும் தன்மை. ஆகையால் இது யோகாவின் சக்திக்கு ஒரு சாட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி குறித்த கேள்விக்கு, “இது நமக்கு பாதிப்பு தான். ஆனால் நம் நாட்டின் மதிப்பு மற்றும் மரியாதையை நாம் இழந்து விட முடியாது. சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது. நம் நாட்டு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும்.
நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இது எதிர்காலத்தில் எப்படி செல்லும் என்று நான் கணிக்க விரும்பவில்லை. யார் எதை செய்தாலும் நம் நாட்டை செழிப்பாக நடத்திக் கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமக்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே செழிக்க முடியும் என்றில்லாமல் எப்படிபட்ட சூழலிலும் செழிப்பாக நம் தொழில்களை நடத்திக்கொள்ளும் திறன்களை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.
ஈஷா கிராமோத்சவம் திருவிழாவிற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்த கேள்விக்கு, “ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஈஷா கிராமோத்சவத்தை 2026-2027-க்குள் நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. 2027ஆம் ஆண்டுக்குள் கட்டாயமாக 20 மாநிலங்களுக்கு மேல் இது நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” எனக் கூறினார்