சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா கடந்த 20-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 65 சுயஉதவிக்குழுக்கள் சார்பில் 35 உணவுக்கடைகள் அமைக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல், ராகி, தினை லட்டு, நாட்டு சர்க்கரை எள்ளுருண்டை, கருப்பு கவுனி அரிசி லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என 520 வகையான ரெடிமேட் உணவுகளும் 7 ரெடிமேட் உணவுக்கடைகள் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழா தொடங்கிய நாள் முதல் சென்னையில் இல்லாத வகையிலான உணவு வகைகளை ஏராளமானோர் பார்வையிட்டு ருசித்து வருகின்றனர்.
அங்கு சென்று ஒவ்வொரு மாவட்டத்தின் பிரபல உணவு வகைகளையும் சாப்பிட முடியாத குறையை இந்த உணவு திருவிழா தீர்த்து வைத்துள்ளது. இந்நிலையில் உணவு திருவிழாவின் கடைசி நாளான நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சென்னை உணவுத் திருவிழாவை மொத்தம் 3.20 லட்சம் பேர் பார்வையிட்டனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.