கொடைக்கானல்: கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2-ம் கட்ட டேலியா மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு மே மாதம் கோடை சீசனில் 62-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக கடந்த நவம்பரில் சால்வியா, டெல்பினியம், இளஞ்சிவப்பு ஆஸ்டர், லில்லியம், அர்னத்திக்கலம் உள்ளிட்ட ஒன்றரை லட்சம் மலர் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்ட டேலியா மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. இதனை கொடைக்கானல் தோட்டக்கலை துறை அலுவலரும், பிரையன்ட் பூங்கா மேலாளருமான சிவபாலன் துவக்கி வைத்தார். கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வீரிய ரகத்தைச் சேர்ந்த 13,000 டேலியா நாற்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.
12-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் டாலியா பூக்கள் பூக்கும் வகையில் நடப்படுகிறது. இந்த பணி ஒரு வாரம் தொடரும். இதுகுறித்து பூங்கா மேலாளர் சிவபாலன் கூறுகையில், ”மூன்றாம் கட்டமாக மலர் நாற்றுகள் நடவு பணி பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியில் சுமார் ஒரு கோடி பூக்கள் பூக்கும்” என்றார்.