சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது; அவ்வாறு செய்தால், பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல் ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் வகுப்பு வாரியாக நடத்தப்படும் வகுப்புகளின் அட்டவணை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ”கல்வித் துறையின் எச்சரிக்கையையும் மீறி சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
விதிகளை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.