
நெல்லை: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் நீடிப்பதால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நெல்லையில் 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், குமரி, தூத்துக்குடியில் 2,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கடற்கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.