சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், காற்றின் திசை மாறியதால், அவர்களின் படகு தவறுதலாக பஹ்ரைன் நாட்டு எல்லைக்குள் சென்றது.
செப்டம்பர் 11-ம் தேதி அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தூதரக அதிகாரிகள் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் 28 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து பஹ்ரைன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் மீனவர்களின் வருமானத்தை நம்பி வாழ்வாதாரமாக வாழும் அவர்களது குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இயற்கைச் சூழலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் எதிர்பாராத தவறுக்கு ஆறு மாதங்கள் தண்டனை என்பது மிகவும் கொடுமையானது. எனவே, பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த அறிக்கையின் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து தூதரகம் மூலம் மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகளை பெற்று மீனவர்களை விடுவித்து அவர்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.