சென்னை: கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக, பிரச்னையில்லாமல் போவது என்பது இன்று அரிதாகிவிட்டது. நிறைய சலிப்பு, கோபம், வருத்தம், வெறுப்பு, ஏக்கம், புரிதல் இல்லாதது போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி வெற்றி காண்பது… கணவன் மனைவி பந்தத்தை எளிமையான முறையில் வலிமையாக்குவது எப்படி?
சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை, அனைத்துக்கும் பாராட்டுங்கள். உங்கள் மனதில் சுமாரானது எனப்பட்டால் கூட பரவாயில்லை. பாராட்டித் தள்ளுங்கள். பாராட்டினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் பாராட்டுவதில் என்ன கஷ்டம். காசா, பணமா… பாராட்டுதானே அள்ளி விடலாம். இதனால் நிஜமாகவே உறவில் மேஜிக் நடக்கும்.
எதை வாங்கி கொடுத்தாலும் சரி, எதை உங்களுக்கு பரிசாக தந்தாலும் சரி, சின்ன விஷயம் முதல் பெரிய முடிவுகள் வரை உங்களுக்கு சின்ன புன்னகையைத் தரும் எதுவாக இருந்தாலும் இரண்டு வார்த்தைகளை நினைவில் வையுங்கள் ஒன்று, நன்றி(Thanks) இன்னொன்று, சூப்பர் (Super). இது இரண்டுமே நேர்மறை வார்த்தைகள். மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்கும்.
அழகு என்பது மனதில்தான் உள்ளது. தோற்றத்தில் அல்ல; புத்துணர்ச்சி, ஃப்ரெஷ், மகிழ்ச்சி, ஃபீல் குட் இப்படியான விஷயங்கள் தோற்றத்தில் பிரதிபலிக்கும். கிரீம் பூசுகிறோமா, டியோ அடிக்கிறோமா சிரித்த முகத்துடன் உற்சாகமாக, புத்துணர்வாக இருங்கள். இதற்கு பணம் செலவழிக்க தேவையில்லை. மனம் வைத்தாலே போதும்.
என் முன்னே தான் அனைத்தையும் பேச வேண்டும். உன் வாலட்டில் இருப்பது என்னவென்று எனக்கு அவசியம் தெரிய வேண்டும். உன் ஃபேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள், ஏன் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் டிபி மாற்றுகிறாய், எதுக்கு பியூட்டி பார்லர் போகுறா, இப்படி ஓவராக பர்சனில் இறங்காமல் அவரவர் விருப்பத்துக்கு, சுகந்திரத்துக்கு மதிப்பு கொடுத்து ஆரோக்கியமான இடைவேளியை அமைத்து கொள்ளுங்கள். ‘நச’ என்ற பெயர் கிடைக்காது, வெறுப்பும் வராது. என் துணை எனக்கு வரம் என்ற பெயர் கிடைக்கும்.
பரிசு என்பதே பெரியதுதான். பெரிய பரிசு தான் மதிப்பை கூட்டும் என்றில்லை. சின்ன சின்ன பரிசுகள் கூட பேரின்பத்தை வரவைக்கும். கைகுட்டை, சிறிய கீ செயின், பேனா, பிடித்த கம்மல், வாலட், டி-ஷர்ட், பிடித்த பாடி-ஸ்ப்ரே போன்ற சின்ன சின்ன பரிசுகள் கூட உங்களது உறவை மேம்படுத்தும். பெரிய எதிர்பார்ப்புகளை கூட பூர்த்தி செய்துவிடும்.