சென்னை: நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ள நிலையில், சீமான் தொடர்ந்து அவருக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார். மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் கூறிய “வெந்த விதை கதை” அரசியல் மேடையில் பெரும் கவனத்தை பெற்றது. ஆனால், அந்தக் கதை தனது கதையென சீமான் கூறியதால், இது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

விஜய் சொன்ன கதையில், மன்னன் வீரர்களுக்கு விதைகள் கொடுத்து, அதை யார் சிறப்பாக வளர்த்தால் அவரே அடுத்த தளபதி என அறிவிப்பார். ஆனால், ஒரு வீரர் மட்டும் “இது வளரவே இல்லை” என நேர்மையாகச் சொல்வார். அதற்குப் பின்னர், மன்னன் தான் கொடுத்த விதைகள் வெந்த விதைகள் என்பதால், வளரவே முடியாது, உண்மையைச் சொன்னவனே தளபதி என அறிவிப்பார். இந்தக் கதையை விஜய் தனது மாநாட்டில் கூறினார்.
இதற்கு சீமான், “நான் சொன்ன கதையை விஜய் எடுத்தார், ‘மன்னன்’ என்ற வார்த்தையை ‘தளபதி’யாக மாற்றிவிட்டார்” என குற்றம் சாட்டினார்.
ஆனால் ப்ளூ சட்டை மாறன், “அந்தக் கதை பல வருடங்களுக்கு முன்பே அம்புலிமாமா, சிறுவர் மலர்களில் வந்துவிட்டது. இணையத்திலும் இருக்கிறது. அதை நீங்க உங்க கதைனு சொல்றீங்க” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சீமானை கலாய்த்துள்ளார்.
விஜய் ரசிகர்கள், “சீமான் சொன்னபோது வைரலாகவில்லை, விஜய் சொன்னவுடன் இந்திய அளவில் வைரலானது” என்கிறார்கள். விஜயின் குட்டிக் கதைச் சொல்வது, ரஜினிகாந்தின் இசை வெளியீட்டு விழாக்களில் கதைச் சொல்லும் பழக்கத்தைப் போலவே இருக்கிறது என்றும் சினிமா, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சீமான் மற்றும் விஜய் இருவருமே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் இன்னும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.