திருச்சி: உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறார்கள் என குற்றம்சாட்டிய அவர், “திமுகவே பெரிய மதவாத கட்சி” என கூர்ந்த விமர்சனத்தை முன்வைத்தார். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த சிலர் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

சீமான், “எந்தக் கட்சியும் தொடங்கும்போதே பெரிய கட்சி அல்ல. வாக்குக்கு காசு கொடுக்காமல் போராடி, இன்று நாங்கள் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளோம்” என்றார். மேலும், “திராவிடம், சமூக நீதி என்று பேசும் திமுக, உண்மையில் மத அடிப்படையில் அரசியல் செய்கிறது” எனக் கூறினார். பெரியார் கல்விக்கான பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி, “என்னை படிக்க வைத்தது என் தாய் தந்தை, பள்ளிகளை கட்டியது காமராஜ் தான்” என்று குறிப்பிட்டார்.
அவரது உரையின் போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “பவுலடியார் கிறிஸ்துவுக்கு முன் பிறந்தவர் என்று கூறினீர்கள், ஆனால் அது தவறு. நல்லா பைபிள் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்” எனக் கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் அதற்கு பதிலளித்தபோது, கேள்வி எழுப்பியவர் மீண்டும் ஆவேசமாகப் பேசினார்.
இதனால் சில நிமிடங்கள் வாக்குவாதம் நிலவியபோதும், அங்கிருந்தோர் அந்த நபரை சமாதானப்படுத்தினர். பின்னர் நிகழ்ச்சி வழக்கம்போல் தொடர்ந்தது. சீமான், “மதங்களை விடு, மரங்களை நடு” என தனது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி சீமான் உரை, மதம் மற்றும் அரசியல் குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.