சென்னை: அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் எடப்பாடி பழனிசாமி பெயரை நேரடியாகச் சொல்லாதபோதிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சிகள் என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் தாமதமின்றி பதிலளித்தார். இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் எனவும், ஜெயலலிதா சொன்னது போல நூறாண்டுகள் ஆளும் இயக்கமாக அதிமுக தொடர வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் எனவும் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல சிக்கல்களை சந்தித்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது தான் தனது முக்கிய கோரிக்கை என தெரிவித்தார். அதற்காக 10 நாட்கள் காலக்கெடு விதிக்கப்படுவதாகவும், அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் எதிர்கால தேர்தல்களில் வெற்றி பெற முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
அவரின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பே எடப்பாடியுடனான மோதல் வெடித்திருந்தது. அப்போது மூத்த தலைவர்கள் தலையிட்டதால் பிரச்சினை அடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் குழப்பம் தலைதூக்கியுள்ளது. “என் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றாவிட்டால், கட்சியிலிருந்து விலகியவர்களை நான் ஒருங்கிணைத்து மீண்டும் சேர்ப்பேன்” என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக எச்சரித்தார்.
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் பதவியை நோக்கி செய்கிறீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், “நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. என் நோக்கம் இயக்கத்தின் நலன்தான்” என்றார். எடப்பாடி தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், இனி அவருடைய சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் அதிமுக உள்கட்சிக் கலகத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.