ஈரோடு: அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து அவர் இன்று தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பேசுவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக, கோபியில் சட்டென திறந்தவெளி வாகனத்தில் ஏறிய அவர் தொண்டர்களைச் சந்தித்தபடி ரோட்ஷோ நடத்தினார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அரசியல் சூழல் ஏற்கனவே சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் உட்கட்சிப் போட்டிகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. ஒரு புறம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் கட்சியின் உள்ளக நிலைமை சிக்கலாகியுள்ளது.
செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் எடப்பாடி நடத்தும் சில கூட்டங்களை புறக்கணித்ததும் இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது. பின்னர் சீனியர் தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்திருந்தாலும், தற்போது மீண்டும் அவர் அதிருப்தி நிலைக்கு மாறியுள்ளார்.
இதனால் இன்று கோபியில் நடந்த அவரது பொதுக் கூட்டத்தில் பெருமளவு தொண்டர்கள் திரண்டனர். அதிகமானோர் வந்ததால், செங்கோட்டையன் சட்டென திறந்தவெளி வாகனத்தில் ஏறி ரோட்ஷோ நடத்தினார். தொண்டர்களை நேரடியாக சந்தித்து உரையாற்றிய அவர், பின்னர் அதிமுக நிலைமையைப் பற்றிய தனது கருத்துகளை விரைவில் வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். இதனால் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.