சென்னையில் அரசியல் சூழல் கசந்த நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி உடையும் என ஆரூடம் கூறிய சில நாட்களில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையேயான நேரடி மோதல் நிலையை சிக்கலாக்கியுள்ளது. கரூர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்ததை செந்தில் பாலாஜி வெளிப்படையாக பாராட்டியதில், அதிருப்தியடைந்த ஜோதிமணி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

“கூட்டணி தர்மம் என்பது பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் கொண்டதாக இருக்க வேண்டும். திமுக தரப்பு எங்கள் கட்சியை அவமதிக்கிறது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தரப்பில் கூடுதல் தொகுதிகளை கோரியும், தேவையெனில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளோம் எனும் அறிக்கைகளும் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணியின் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் 2026 தேர்தலுக்கு திமுகவிடம் பாதிக்கு பாதி சீடுகளை கேட்கும் முயற்சியில் இருப்பதாகவும், ஆட்சிப் பங்கையும் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமை, எடப்பாடி பழனிச்சாமியின் “திமுக கூட்டணி உடையும்” என்ற கூற்றுக்கு வலுச்சேர்த்துள்ளது. அதேவேளை திமுக தலைவர்கள் இதனை இயல்பான பிரச்சனையாகவே கருதி, தேர்தலுக்கு முன் சமரசம் ஏற்படும் என்று நம்புகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக விஜயின் “தமிழக வெற்றிக் கழகம்” உருவாக்கிய தாக்கம், காங்கிரஸுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்ததாகவும், திமுக சீடுகளை வழங்காவிட்டால் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கருதப்படுகிறது. இதனால், திமுக–காங்கிரஸ் உறவு அடுத்த மாதங்களில் எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.