சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. மெயின் லைனுக்கு பதிலாக, லூப் லைன் எனப்படும் கிளை லைனை எடுத்து, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.
இதில், ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘ஸ்விட்ச் பாயின்ட்’ போல்ட்கள் அகற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். இதனிடையே, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சென்னையில் இரண்டு நாட்களாக 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் தமிழக ரயில்வே போலீசாரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்தபோது பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்களிடம் நிலைய மேலாளர் பாயிண்ட்மேன் விசாரணை நடத்தினார். மேலும், விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த விபத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொடர் அசம்பாவித சம்பவங்களை அடுத்து, தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, தமிழக ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர் கூறியதாவது:-
விபத்து நடந்த இடத்தில் குறிப்பிட்ட போல்ட் மற்றும் நட்டுகள் தளர்ந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, சதியால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில், விபத்துகளை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் ரயில்வே போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர, ரயில் பாதையில் ரோந்து செல்ல மாநில போலீசாருக்கு அறிவுறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை தங்கள் எல்லைக்குள் உள்ள ரயில் தண்டவாளங்களில் ரோந்து செல்வதன் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து இடைமறிக்க முடியும். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இது பாதுகாப்பை பலப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.