சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக சார்பில் 18-ஆவது நிழல் வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிதி அறிக்கை 85,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும், இதில் 65,000 கோடி ரூபாய் வேளாண் துறைக்காக ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், பாசனத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நீர்வளத்துறை சார்பில் 20,000 கோடி ரூபாய் செலவிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில், 12,500 கோடி ரூபாய் உழவர்கள் மூலதன மானியத்திற்காக மற்றும் வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 22,500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீடு மற்றும் பிற திட்டங்களுக்கு 30,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனைத்து விளைப்பொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டம் உருவாக்கப்படும் என்றும், வேளாண் துறைக்கு 25% நிதி ஒதுக்கீடு அளிப்பதுதான் பாமக கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் கொள்முதல் மானியமாக 6,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பாமக நிழல் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க 1 லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான பருப்பு மற்றும் எண்ணெய்வித்து உற்பத்தி திட்டங்களையும், தமிழ்நாட்டில் வேளாண்மையை மேம்படுத்த புதிய தமிழ்நாடு வேளாண் திட்ட ஆணையத்தை ஏற்படுத்தும் முயற்சி இருப்பதாகவும் பாமக நிழல் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்கள் சேர்க்கப்படவுள்ளன.