சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. மெயின் லைனுக்கு பதிலாக, லூப் லைன் எனப்படும் கிளை லைனை எடுத்து, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.
இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் சோதனை நடத்தி மாதிரிகளை எடுத்தனர். இதனிடையே, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விபத்து குறித்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தினார்.
கடந்த வாரம் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், தமிழக ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, ரயில் விபத்து குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், காயம் மற்றும், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல், அலட்சியச் செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த போது பணியில் இருந்த நிலைய மேலாளர், புள்ளியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த விபத்தில் சதி இருக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தமிழக ரயில்வே போலீஸார் ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:-
விபத்து நடந்த இடத்தில், அதாவது பிரதான பாதையை கிளை பாதையாக (லூப் லைன்) மாற்றக்கூடிய இடத்தில் போல்ட், நட்டுகள் அகற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, ரயிலை கவிழ்க்க சதி என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கை மாற்றியுள்ளோம்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டத்தில் பிரிவு 150 சேர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இன்னும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.