சென்னை: முழுக்க முழுக்க எதிர்காலத்தில் வீடு கட்டும் எண்ணத்தோடும் பெரும்பாலானவர்கள் முதலீட்டை மட்டுமே கருத்தில் கொண்டும் மனை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
நிலம் வாங்கும்போது அந்த குறிப்பிட்ட நிலம் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதை அறிவதில்தான் பலரின் கவனம் இருக்கும். நிலம் வாங்கும்போது 50, 60 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
சில நிலத்தை வேறொருவருக்கு குத்தகை கொடுத்திருப்பார்கள். அந்த குத்தகை காலத்துக்குள் அந்த குறிப்பிட்ட நிலம் விற்பனைக்கும் வரும். இதுபோன்ற சம்பவங்களில் நிலம் வாங்குவோர், குறிப்பிட்ட நிலம் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று அந்த நிலம் சம்பந்தப்பட்டவருக்கு உரியதுதானா என்பதை விசாரித்து அறியலாம்.
நிலத்தின் தன்மையையும் அறிந்து கொள்வதற்கு இது வழியை ஏற்படுத்தும். தகுந்த சர்வேயரை கொண்டு நமக்கு விற்பனை செய்யப்படும் நிலத்தை அளந்து பார்க்கவேண்டும். நிலத்தின் நான்கு எல்லைகளுக்கு உரியவர்களின் நிலங்கள் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.
நிலம் இருக்கும் இடத்துக்கு நேரில் ஒரு விசிட் அடித்து அங்கு இருப்பவர்களிடமே நிலத்தடி நீர், கிணற்று நீர் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மண்ணின் தன்மை, அது, பாறை பூமியா, வண்டல் பூமியா, களிமண் பூமியா என்பதை எல்லாம் தெரிந்துகொண்டு நிலத்தில் முதலீடு செய்வது அவசியம்.
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதைச் சார்ந்தவர்களிடமோ தீர விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்றார்போல் மண்ணின் தன்மைக்கேற்ப அஸ்திவாரம் போடும் தன்மையும் மாறும்.
நீங்கள் வாங்கப்போகும் மனையை பார்வையிட கட்டிடங்களை வடிவமைக்கும் பொறியாளர்களையோ அல்லது இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மேஸ்திரிகளையோ உடன் அழைத்துச் சென்று மனையை பார்வையிடலாம். நிலத்தின் தன்மைக்கேற்ப அஸ்திவாரத்தின் தன்மை மாறும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்தான்.
அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த மனையை சுற்றி என்னென்ன மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் விசாரித்து அறிந்து நிலத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும்.
நிலம் வாங்க முடிவு செய்து விட்டால் முழுமையாக அதைபற்றி தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். பாறை பகுதியாக இருந்து விட்டால் மிகவும் சிரமம் என்பதை உணர வேண்டும்.
தண்ணீர் எத்தனை அடி ஆழத்தில் கிடைக்கிறது என்பதை அருகில் உள்ள பகுதியில் நன்கு விசாரித்துக் கொள்ள வேண்டும்.