பொன்னேரி: கும்மிடிப்பூண்டி-சென்னை வழித்தடத்தில் பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர், விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் உள்ளன. வடசென்னையை ஒட்டியுள்ள இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை மற்றும் நெல்லூர் வரை நீட்டிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், காட்டுப்பள்ளி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் மின்சார ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த வழித்தடத்தில் மட்டும் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல 1.15 மணி நேரம் ஆகும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்ல 3 மணி நேரம் ஆவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி ரயில்கள் இயக்கப்படாமல் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும், இதனால் நேர விரயம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரயில்களை இயக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொன்னேரி ரயில் நிலையம் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நேற்று முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 1 லட்சம் பயணிகளிடம் கையெழுத்து சேகரித்து மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவோம் என்றனர்.
மேலும், சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் பாதைக்கு சரக்கு ரயில் மற்றும் விரைவு ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே தற்போதுள்ள 2 வழித்தடங்களை முழுமையாக 4 பாதைகளாக மாற்றி, புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.