பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் அன்புமணிதரப்பை அங்கீகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாமக பெயர், கொடி, சின்னம் அனைத்தும் அன்புமணிக்கே என ஆதரவாளர்கள் உற்சாகம் காட்டி வருகின்றனர். ஆனால், “நான் தான் பாமக” என நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமகவை கூட்டணியில் இணைக்க அதிமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அன்புமணி, திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதால், அவரின் அதிமுக கூட்டணி உறுதி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம், திமுக அரசைப் பாராட்டி வரும் ராமதாஸ் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை எம்பியுமான சிவி சண்முகம் திடீரென தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார். திருமண அழைப்பிதழை வழங்கும் பெயரில் நடந்த இந்தச் சந்திப்பில், உண்மையில் அரசியல் விவாதங்களும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை-மகன் இணைந்தால்தான் கட்சிக்கும் சமூகத்திற்கும் நன்மை ஏற்படும் என சண்முகம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாமக-அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் நகரும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், தந்தை-மகன் இடையேயான பிளவால் பலவீனமடைந்த பாமகவை மீண்டும் ஒன்றிணைக்க அதிமுக ஆர்வமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இது வரவிருக்கும் தேர்தலில் முக்கிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது.