
சென்னை: மக்கள் நலத்துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பக்கோரி நாளை முதல் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் புறக்கணிக்கப்படும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் சீனிவாசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாய் சேய் இறப்பு தணிக்கை கூட்டத்தை துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல், ஆய்வுக் கூட்டத்துக்கும் புதிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாத நிலையில், மகப்பேறு இறப்புகளைக் குறைக்க வழிகாட்டுதல் முறை எந்த வகையிலும் உதவாது. எனவே, அவற்றை கைவிட்டு, மக்கள் நலத்துறையில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக விருப்ப ஓய்வு வழங்க வேண்டும். மேலும், பயோமெட்ரிக் முறையில் டாக்டர்கள் வருகைப் பதிவு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் நாளை முதல் வகுப்புகளைப் புறக்கணிக்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அந்தந்த மாவட்ட அளவில் உள்ள அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட பிரிவுகளில் இருந்து வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல், பிரச்னைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். டிசம்பர் 3-ம் தேதி அனைத்து துறைகளிலும் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் அடையாளமாக ஒரு நாள் நிறுத்தப்படும். அதற்குப் பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.