திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், எம்.ஜி.ஆர்.நகர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான சாத்தங்காடு ஏரி உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மழைக்காலங்களில் மழைநீரால் நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது. மேலும், இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வறண்டு போகாததால், மே, ஜூன் மாதங்களில் பல வகையான வெளிநாட்டு பறவைகள் ஏரிக்கு வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஏரியின் கரையில் இருந்த முள் புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு கரை கட்டப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், சாத்தங்காடு ஏரியை சீரமைத்து, பறவைகள் சரணாலயம் அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் டி.எம்.தனியரசு தலைமையில் நடந்த மண்டல கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆவண நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இப்பணியை ரூ. 33 லட்சம். ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியை சீரமைத்து சரணாலயம் அமைக்கும் திட்டம் பல மாதங்களாக தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே பறவைகள் சரணாலய திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவொற்றியூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாத்தங்காடு ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஒரு காலத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனங்கள், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் மூலம், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இதனால் ஏரியின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. மேலும், மழைநீர் தேங்கும் பகுதியாக இருந்த ஏரி, முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பறவைகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகர அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.