சென்னை: பாலியல் ரீதியாக பெண்கள் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று சமூக நல அலுவலர் அர்பிதா தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். உடன் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் ஞானசேகரன் என்பவர்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு மிக வேகமாக செயலாற்றியது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடக்கக்கூடாது. அதற்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்களிடம் அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சமூக நல ஆர்வலர் அர்பிதா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் விதம் மாற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இதுகுறித்து ஆண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி எங்கும், எப்போதும் நடக்க கூடாது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப பெண்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.