சென்னை: சூரிய வீடு இலவச மின் திட்டத்தின் கீழ் இதுவரை 13,560 பேர் தங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவியுள்ளனர். நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு, ‘பி.எம். சோலார் வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டமான சூர்யாகர்-முப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தை ஜனவரி மாதம் பிரதமர் மோடி அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மின் நிலையத்தை அமைப்பதன் மூலம் குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும். உபரி மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்கலாம்.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கிலோவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.30,000, 2 கிலோவாட் மின் உற்பத்திக்கு ரூ.60,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைக்க ரூ.78,000 மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
சூரிய ஒளி மின் நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்நிலையில் இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13,560 பேர் விண்ணப்பித்து தங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவியுள்ளனர். மேலும் 10,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.