சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கு எதிரான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அனுமதியின்றி தனி அறக்கட்டளை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போலீசில் புகார் அளித்தது. அறக்கட்டளை குறித்து கேள்வி எழுப்பியபோது ஜாதியைக் குறிப்பிட்டதாக துணைவேந்தர் மீது இளங்கோவன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், துணைவேந்தர் ஜெகநாதனை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெகநாதனுக்கு எதிரான விசாரணைக்கு தடை விதித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.