சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில், கடல் ஆமைகளுக்கு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் நேற்று முன்தினம் கால்நடை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கடல் வளங்களை பாதுகாப்பதிலும் மீன் வளத்தை அதிகரிப்பதிலும் கடல் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆழ்கடலுக்குச் சென்று டிசம்பர் முதல் மார்ச் வரை தமிழகம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு வந்து இனப்பெருக்கம் செய்து முட்டையிடும்.
இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளும், ஆந்திர கடலோரப் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமைகளும் இறந்து அழுகிய நிலையில் உள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, கால்நடை மருத்துவர்கள் புலி, யானை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்து, அதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

ஆனால், கடல் ஆமை பிரேத பரிசோதனையில் போதிய அனுபவம் இல்லாததால், நேற்று முன்தினம் வண்டலூரில் உள்ள உயர் வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் வனத்துறை சார்பில் கடல் ஆமை பிரேத பரிசோதனை குறித்த பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பேராசிரியர்கள் கலந்து கொண்டு, தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த கள கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்கள் என 25 பேர் பயிற்சி பெற்றனர்.
கடல் ஆமைகளின் உயிரியல், உடலியல் மற்றும் உடற்கூறியல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. கடல் ஆமைகளின் உடற்கூறியல் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.