நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜ்குமார் (25), காளிமுத்து மகன் ராஜேந்திரன் (49), சென்னையைச் சேர்ந்த மனோகரன் மகன் நாகலிங்கம் (45) ஆகிய 3 பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமானது.
வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த 6 இலங்கைக் கடற்கொள்ளையர்கள் அவர்களது படகில் ஏறி, மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ராஜ்குமாரின் தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. ராஜேந்திரன் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. நாகலிங்கத்துக்கு உள் காயம் ஏற்பட்டது.
மீனவர்களை அரிவாளால் வெட்டி மிரட்டிய கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த 300 கிலோ வலைகளை வெட்டி எடுத்துச் சென்றனர். படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணியளவில் மீனவர்கள் கோடியக்கரைக்கு திரும்பினர். அவர்களை சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், மற்றொரு படகில் கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற பெருமாள்பேட்டையைச் சேர்ந்த காத்தவராயன் மகன் சின்னையன் மகன் குமார் (48), காத்தவராயன் மகன் ஜெகன் (30), நடுக்காட்டான் மகன் லட்சுமணன் (40) ஆகியோர். அவர்கள் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தாக்கி அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த மீனவர்களுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. உள் காயங்களுடன் நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து வேதாரண்யம் கடலுார் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.