சென்னை: அஜித் குமார் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பணி வழங்குவதாக உறுதியும் அளித்துள்ளார்.
திருபுவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துவார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித் குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அஜித் குமார் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
“முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்” என அஜித் குமாரின் தாயார் தெரிவித்தார்.