கரூரில் ஒரே நாளில் 39 பேரின் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக எழுந்த கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் போதிய குளிர்சாதன வசதி இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று உடனடியாக உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முதல்வர் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் ஆண்கள் 13, பெண்கள் 18, குழந்தைகள் 10 பேர். உடல்களை தாமதமின்றி குடும்பங்களுக்கு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்தது” என்றார்.
உடற்கூராய்வு பணிக்காக 24 மருத்துவர்கள் மற்றும் 14 உதவி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வு அன்றைய மதியம் 1.10 மணிக்கு நிறைவடைந்தது. 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இரண்டு உடற்கூராய்வு மேஜைகளுடன் கூடுதலாக மூன்று மேஜைகள் அமைக்கப்பட்டு 14 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றப்பட்டது” என்றார். இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் அவசர உடற்கூராய்வு குறித்து விமர்சித்தன. ஆனால் உடல்களை வைக்க இடமின்றி இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதல்வர் விளக்கம் அளித்தார்.