தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பை முன்னெடுத்து, தென் மாநிலங்களின் குரலை வலுவிழக்கச் செய்யும் ஆயுதமாக வட மாநிலங்களின் மக்கள் தொகையை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்படுவதற்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். இதனால், தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறையும் என்றும், அதன் மூலம் நமது உரிமைகள் பாதிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது, இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதலிய 7 மாநிலங்களின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும், மேலும் 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தெலங்கானா சட்டப்பேரவையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், புதிய தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கே அநீதி என்று குறிப்பிட்டார். அவர், மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வது, கூட்டாட்சி நியாயத்தை மதிப்பு இழக்கச் செய்யும் வகையில் இருக்கிறது என்றும் கூறினார். மேலும், இது இந்திய ஜனநாயக சீர்குலைவாகும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.
தனியார் ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி, இது மாநிலங்களின் முயற்சிகளை தண்டிப்பது போன்று உள்ளது என்றும், நியாயமான மற்றும் நேர்மையான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டார்.