தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு, அவற்றுக்கு விரைவாக தீர்வு காணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை மக்கள் வசிக்கும் இடங்களில் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம்.

அமைச்சரவை கூடுதல் தலைமை செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, இதை பற்றிய முழு விளக்கத்தை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நகரங்களில் 43 சேவைகள், கிராமங்களில் 46 சேவைகள் என மொத்தம் 13-15 துறைகள் பங்கேற்கின்றன. இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
மொத்தமாக 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் நகர்புறத்தில் 3,768 மற்றும் ஊரக பகுதிகளில் 6,232 முகாம்கள் நடைபெறும். முகாம்களின் எண்ணிக்கை முன்னர் இருந்ததைவிட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முகாம் 10,000 பேர் தொகை அடிப்படையில் நடைபெறும்.
முன்பே ஒரு வாரத்துக்கு முன் மக்கள் வீடு, வீடாக சென்று முகாம் நடைபெற இருப்பது பற்றி தெரிவிக்கப்படும். இந்த முகாம்கள் வாரத்தில் நான்கு நாட்கள் நடைபெறும். மேலும், 1100 என்ற தொலைபேசி எண்ணில் 100 பேர் கொண்ட உதவி மையமும் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்களை உள்ளடக்கியது. இந்த முயற்சி 2021ல் தொடங்கிய ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் தொடர்ச்சி. இதுவரை 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ளன, அதில் 95% மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களும் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.