சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என கூறினார். போக்சோ வழக்குகள் அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து அவர் கடும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை குறைவாக இருப்பதையும், சமூக பாகுபாடுகள் நீங்காததையும் சுட்டிக்காட்டினார். பெண்கள் வீடு விட்டு வெளியே வர அச்சப்படுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்றும், குற்றங்களுக்கு விரைவான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதால் குற்ற விகிதம் குறைந்து வருவதாகவும் கூறினார்.
பெண்கள் கல்வி, தொழில் மற்றும் தலைமைப் பதவிகளில் நாட்டின் முன்னணியில் உள்ளதாகவும், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்றும் விளக்கினார். அமைச்சர் கீதா ஜீவன் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டிய அவர், பெண்கள் பங்களிப்பும், பாதுகாப்பும் தமிழகத்தின் பெருமை என தெரிவித்துள்ளார்.