தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு முறை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய நலத்திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்ட ஆணைகள் உள்ளிட்ட பல நலன்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களைச் சந்தித்து பேசிய அவர், ஆளுநர் தமிழுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து பேசிவருவதாக குற்றஞ்சாட்டினார். இதனை வைத்து, ஒன்றிய பாஜக அரசு தன்னுடைய இழிவான அரசியலை நடத்தி வருகிறது என அவர் கடும் தாக்குதல் நடத்தினார்.
மேலும், “ஆளுநர் உண்மையில் சேவை செய்ய விரும்பினால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சென்று சுற்றி வரட்டும். தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து அரசியல் செய்யும் நிலையை நாம் ஏற்கமாட்டோம்” எனவும் ஸ்டாலின் எச்சரித்தார்.
அதே சமயம், 2021 தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விடியல் பயணம் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.