கிருஷ்ணகிரி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 404 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றும், மேலும் பல திட்டங்களை அமைதியாக செயல்படுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்பி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூர் சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அவர், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விழா மேடைக்கு வந்து காவல் துறையின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் சிறப்பு கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் 3 கோடியே 5 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் இணைப்பு சக்கர வாகனங்களை மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார். 562 கோடியே 14 லட்சத்து 3000 ரூபாய் மதிப்பிலான 1114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 270 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 193 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார். 85,711 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி, 2,23,013 பயனாளிகளுக்கு 2,052 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியது, கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள் திமுக ஆட்சியில் அமைந்தது. ஊரக மற்றும் நகர பகுதிகளிலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம். நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வரலாற்று பெருமை வாய்ந்த கிருஷ்ணகிரியில் மக்கள் பயன்பெறும் பல நலத்திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.