சென்னை: சென்னையின் தண்டையார்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதிகளில் தெருநாய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தண்டையார்பேட்டை, சேனியம்மன், திலகர் நகர், குடிசை பாலன் வாரிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிவதால், இரவில் தெருக்களில் நடமாடுவதில் பெரும் அச்சம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தெருநாய்களைப் பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள், நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு ஊசி போட்டுவிட்டு, பின்னர் அவற்றை மீண்டும் தெருக்களில் விடுவதாகக் கூறுகின்றனர். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறும் மக்கள், நாய்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் தங்குமிடங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டிலேயே நாய் கடித்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் மாவட்டம் சேலம் மாவட்டம். சேலத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.