சென்னை: சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நேற்று 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று காலை அறிவித்தது. அதே நேரத்தில் சென்ட்ரல் – எண்ணூர் மற்றும் மீஞ்சூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த திடீர் அறிவிப்பால் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின் பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களுக்காக பயணிகள் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “ரயில்வே பராமரிப்பு பணிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.ஆனால், நேற்று காலை 9 மணிக்கு அடுத்த 2 மணி நேரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது ஏற்புடையதல்ல. முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டிருப்போம்,” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.